Friday, May 6, 2011

மனிதர்களின் 10 வினோத பழக்கங்கள்...

11 comments
நம்மில் பலருக்கு நம்மை அறியாமலேயே பல பழக்க வழக்கங்கள் உண்டு... அதில் சில வியப்பானவையும்கூட. அதைப் பற்றிய ஒரு பதிவுதான் இது...

(முன் குறிப்பு: இதில் நானே பின்பற்றுவது சிலவற்றை மட்டுமே!!!)

1. அதிகமாக நான் கவனித்து, எனக்கு புரியாத ஒரு பழக்கம், ரூபாய் நோட்டுகளில் தங்கள் பெயர்களை எழுதிக்கொள்வது! இதன் நோக்கம்தான் என்ன?! தான் போகாத ஊருக்கும், மாநிலத்திற்கும் தன் பெயராவது சுற்றட்டும் என்ற எண்ணமா அல்லது இதே ரூபாய் தன்னிடம் திரும்பி வருகிறதா என்ற ஆராய்ச்சியா?! பரிட்சைத்தாளில்கூட பெயர் எழுத மறக்கும் நண்பர்கள், ரூபாய் நோட்டில் பெயர் எழுதுவதில் சலிப்பதில்லை!!!

2. தெருவில் நின்றிருக்கும்போது யாராவது வழி கேட்டால், “நேராக போய் வலது பக்கம் திரும்பி, பிறகு இடது பக்கம் இரண்டாவது தெருவில் திரும்பினால் மூன்றாவது கட்டிடம்” போன்று எதையாவது சொல்வதோடு நிறுத்தாமல், அதோடு கையால் சைகை காட்டி, வழி கேட்ட நபரை சற்றும் பார்க்காமல், வழி சொல்லும் தெருவின் தூரப்புள்ளியை மட்டும் உற்று நோக்குவது என்னாத்துக்கு?!

3. பட்டன் ரிப்பேர், பேட்டரி அவுட் போன்ற தெளிவான காரணங்களால் ரிமோட் வேலை செய்யாது என்று தெரிந்தும் அதை இரண்டு தட்டு தட்டி உபயோகிக்க முற்படுவதும் அது தப்பித்தவறி வேலை செய்துவிடுவதும் எந்த இயற்பியல் விதி என்று தெரியவில்லை! மொபைல் ஃபோன்களுக்கும் இது பொருந்தும்!!!

4. ஏன் வாங்குகிறோம் எதற்கு வாங்குகிறோம் என்று காரணம் இல்லாமல் வீட்டில் அடுக்கி வைப்பதில் இப்போதெல்லாம் திரைப்பட வி.சி.டி.க்களுக்கே முதலிடம். தன்னிடம் என்னென்ன திரைப்படங்கள் இருக்கின்றன, அதில் எத்தனை பார்த்தது, எதெது பார்க்காதது என்று பலருக்கும் தெரிவதில்லை! ஆனால் குறுந்தகடு வாங்குவதும் குறையவில்லை, அதை பார்க்காமல் அடுக்கி வைக்கும் பழக்கமும் மாறவில்லை!

5. தெரிகிறதோ இல்லையோ, கருத்து சொல்வதுதான் இன்றைய ஃபேஷன்! புரிந்தும் புரியாமலும் இருக்கும் அனைத்து வலைப்பூவிலும் சென்று கருத்து சொல்லாவிட்டால் தூக்கம் வராது சிலருக்கு! வலைப்பதிவிலும் ஃபேஸ்புக்கிலும் புரியாத சமாச்சாரத்தை ‘லைக்’ பண்ணுவதும், சம்மந்தமே இல்லாமல் கமெண்ட் செய்வதும் (நான் என்னைச் சொல்லலீங்கோ!!!) யார் சொல்லிக்கொடுத்த கெட்டப் பழக்கம்?!

6. புத்தகத்தின் பக்கங்களின் நடுவில் மயிலிறிகை வைத்துக் கொண்டு, அதோடு நிறுத்தாமல், அது குட்டி போடும் என்று புருடா விடுவதும், அதற்கும் ஒருபடி மேலே போய் இறகுக்கு பசிக்குமென்று அரிசி வைப்பதும் சித்து வேலைகளின் ஆரம்ப நிலை! (இதையெல்லாம் நம்பி சிறு வயதில் ஏமாந்த கேஸ்தான் நானும்!)

7. பரவலாக எல்லோரும் பார்த்திருக்கும் ஒரு பழக்கம், தெருவில் நடக்கும்போது கீழே வசதியான அளவில் ஒரு கல் கண்ணில் தென்பட்டுவிட்டால் போதும், அது ஒரு குழிக்குள் விழும்வரை அதை எற்றிக்கொண்டே நடப்பது சிறு வயதிலிருந்து பலருக்கும் விருப்பமான ஒரு ‘ஸ்டைல்’!

8. வெற்றிலைப் பாக்கு மெல்லும் பழக்கம் எவ்வளவு கெடுதலோ, அதோடு தொற்றிக் கொண்டு வந்துவிடும் மற்றொரு பழக்கம் அதைவிட ஆபத்தாக தெரிகிறது. வெற்றிலை போடுவதற்கு முன் வாய் நம நமவென்று இருக்கிறதோ இல்லையோ, அதை மெல்லும்போது ஒரு வெள்ளைச் சுவர் எதிரே தெரிந்துவிட்டால் பலருக்கும் அதில் துப்பிவிட வேண்டும் என்று வாய் நம நம நம நமவென்று ஆகிவிடுகிறது!

9. எந்தவொரு பட்டியலிட்டாலும் ஐந்தின் பெருக்கல் தொகையாகவே கணக்கிடுகிறோம்... 5 சாப்பாட்டு வகைகள், 10 வினோத பழக்கங்கள், 15 பல் துளக்கும் எளிய முறைகள் என்று எதை எடுத்தாலும் 5! எனவே, இந்தப் பழக்கத்தை துறக்க எண்ணியதாலும் வேறு எதுவும் நினைவுக்கு வராததாலும், 9 பழக்கங்களோடு இந்தப் பட்டியலை முடித்து விடுகிறேன்!

(பின் குறிப்பு: தமிழில் பதிவெழுத வேண்டுமென்ற என் வெகுநாள் ஆசையை இந்தப் பதிவோடு நிறைவேற்றிக் கொள்(ல்)கிறேன்!!! )